புதுக்கவிதைகளில் சமுதாய சிந்தனை.
முன்னுரை: இலக்கியத்தில் உரைநடை, கவிதை, வசனக்கவிதை என பல வடிவங்கள் உண்டு. அவற்றுள் கவிதை என்பது ஒரு பொருள் குறித்து சுருக்கமாகவும் சுவைபடவும் அழகுநடையோடும் சொல்லப்படுவதால் தனித்துவம் பெறுகிறது.
கவிதையில் மரபுக்கவிதை, புதுக்கவிதை, குறுங்கவிதை (ஹைக்கூ) என பல பிரிவுகள் இருக்கிறது. இவற்றில் புதுக்கவிதைகள் வழமையான மரபுகளை உடைத்து உள்ளத்து உணர்ச்சிகளை உள்ளது உள்ளபடியே பதிவு செய்கின்றன. ஆகவே அவற்றுள் சமுதாயச் சிந்தனைகளும் ஏராளமாய் காண கிடைக்கின்றன.
பொருளுரை: புதுக்கவிதைகளில் சமுதாயச் சிந்தனைகள் குறித்து இங்கே காண்போம். கல்வி, வேலைவாய்ப்பின்மை, விவசாயத் தொழில் நசிவு, நகரத்து மக்களின் பாடுகள், பசி, குடிநீர் தட்டுப்பாடு, ஆணாதிக்க சிந்தனை போன்ற பல்வேறு கருப்பொருள் குறித்து புதுக்கவிதைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொறுப்பற்ற தந்தையால் குழந்தைத் தொழிலாளர்கள் உருவாவது குறித்து ஒரு கவிதை:
"தந்தை ஊர் சுற்றுகிறான்
மகன் பீடி சுற்றுகிறான்"
பருவமழை பொய்த்து வறட்சி ஏற்படுவதால் கிராமங்களில் விவசாயம் நலிவடைகிறது. கிராமத்து மக்கள் வேலைத் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்கிறார்கள். சிலர் தற்கொலையும் செய்து கொள்கிறார்கள். இந்த அவலத்தை கூறுகிறது இந்த கவிதை:
"அன்று-நஞ்சை உண்டு
சாகுபடி ஆனது
இன்று- நஞ்சை உண்டு
சாகும்படி ஆனது"
வறுமையின் காரணமாக சிறுதிருட்டு செய்வோரையும் .மக்கள் சொத்துக்களை சூரையாடுவோரையும் அரசு தண்டிப்பதைப் பற்றி சொல்கிறது இந்த கவிதை.
"கோழி திருடியவனுக்கு
முட்டிக்கு முட்டி
கோடி திருடியவனுக்கு
குளு குளு அறை"
ஆணாதிக்க சிந்தனைப் பற்றி அதிரவைக்கும் கவிதை ஒன்று:
"கணவன் இறந்தான்
மனைவி விதவையானாள்
மனைவி இறந்தாள்
கணவன் மாப்பிள்ளையானான்"
முடிவுரை: இவ்வாறு பல்வேறு சமுதாயப் பிரைச்சினைகள் குறித்து புதுக்கவிதைகளில் அருமையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் கையாளப்பட்டுள்ளன. புதுக்கவிதையின் சிறப்பே வாசகனை எளிதாகவும் விரைவாகவும் சென்றடைவதுதான்.
எனவே,
புதுக்கவிதைகளை வாசிப்போம்!
சமுதாயத்தை நேசிப்போம்!!
No comments:
Post a Comment